தமிழ்நாடு

கடன் செயலி மூலம் 200 பேரின் ஆபாச படங்களை வெளியிட்டு பணம் பறித்த திருப்பூர் கும்பல்

Published On 2023-01-19 09:34 GMT   |   Update On 2023-01-19 09:34 GMT
  • கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் கும்பல் ஈடுபட்டுள்ளது.
  • கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண் கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி 'பைசா ஹோம்' என்ற கடன் செயலியை பதிவிறக்கம் செய்து 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அப்பெண் செலுத்தினார். தொடர்ந்து கடன் பெற தகுதியுடையவர் என்று எஸ்.எம்.எஸ்., வந்தது. இதையடுத்து கடன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாயை கடன் பெற்றார்.

இந்தநிலையில் தவணை காலம் முடியும் முன்னரே பணத்தை திருப்பி செலுத்த கூறி எஸ்.எம்.எஸ்., வந்தது. பணத்தை செலுத்தாவிட்டால் சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியதுடன் அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாயிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் பி.என்., ரோடு புஷ்பா சந்திப்பு அருகே அறை எடுத்து கால் சென்டர் அமைத்து ஒரு கும்பல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முகமது அஸ்கர், (வயது 24), முகமது ஷாபி(36), முகமது சலீம்(37), அனீஷ் மோன் (33) மற்றும் அஸ்ரப்( 46) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வெளிநாட்டு கடன் செயலி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு கடன் வழங்குவதாகவும், புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஹைடெக்கான 11 சிம் பாக்ஸ், 500 சிம் கார்டுகள், 6 மோடம், 3 லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், யூரோ டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட புதிய தகவல் தெரியவந்துள்ளது.

கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதில் ஏராளமான மோசடி நபர்கள் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விபரங்களை டெல்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது.

அதில் மேற்கொண்ட விபரங்கள் 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. 200 பேரின் ஆபாச படங்களை வெளியிட்டு பணம் பறித்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்கிறது.

இதுதவிர இந்த நபர் மூலமாகவே திருப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிம் பாக்ஸ், சிம் கார்டு மாற்றுவது உட்பட அனைத்து உத்தரவுகளையும் இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்துள்ளனர். கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News