அம்மாபேட்டை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
- கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
- அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இங்கு மதுக்கடை இருப்பதால் தங்கள் பகுதியில் இருக்கும் வாலிபர்கள் வேலைக்கு கூட செல்லாமல் குடித்து விட்டு சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்தக் கடையில் வாலிபர்கள் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களில் செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.
எனவே இந்த மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தியூர்-மேட்டூர் மெயின் ரோட்டில் முளியனூர் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.
இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்துகளைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.