துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்
- ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.