தமிழ்நாடு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பசுமையாக காணப்படும் தாளவாடி- பர்கூர் வனப்பகுதி

Published On 2024-05-19 03:59 GMT   |   Update On 2024-05-19 03:59 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • தொடர்ந்து இரவு மற்றும் நள்ளிரவில் சாரல் மழை தூறி கொண்டே இருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதை தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அனல் காற்று வீசியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடனும் பலத்த சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதே போல் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, தலமலை மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட வனப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் வாட்டியது. இதனால் மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள், புல் வயல்கள் காய்ந்து காட்சி அளித்தது. தொடர்ந்து கடும் வெயில் சுட்டெரித்ததால் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திடீரென தீப்பிடித்தது. இதை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதே போல் 2 முறை வனப்பகுதியில் தீ பிடித்து அணைக்கப்பட்டது.

இந்த நிலையில் தாளவாடி, தலமலை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பலத்த மழை கொட்டி வருகிறது.

தொடர்ந்து இரவு மற்றும் நள்ளிரவில் சாரல் மழை தூறி கொண்டே இருக்கிறது. மேலும் பகல் நேரங்களில் ஒரு சில நேரங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெயிலால் தவித்த மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் நேற்றும் தாளவாடி வனப்பகுதியில் சாரல் மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்வதால் தாளவாடி வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் வனப்பகுதி முழுவதும் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலால் சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்த மக்கள் வனப்பகுதியில் குளிர் காற்று வீசுவதால் குதுகளித்தனர்.

இதே போல் அந்தியூர் அருகே உள்ள பர்கூர், தட்டக்கரை, தாமரைக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பர்கூர் மலை கிராம பகுதிகளில் சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்தது.

இதே போல் நேற்றும் பர்கூர் வனப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக பரவலாக மழை கொட்டியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்பட்டு வருகிறது.

மேலும் மலைப்பகுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

Tags:    

Similar News