இரவு நேரத்தில் ஊட்டி சாலைகளில் சுற்றி திரிந்த காட்டெருமை கூட்டம்- பொதுமக்கள் பீதி
- ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
- காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது.
ஊட்டி:
சுற்றுலா நகரமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியை சுற்றி தீட்டுக்கல், கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
அங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது நகருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி நகரின் மிக முக்கிய சாலையான மார்க்கெட் சாலையில் 5-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன.
இந்த காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது. காட்டெருமைகள் வருவதை பார்த்ததும், வாகன ஓட்டிகளும், அந்த பகுதி பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.
சில வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கியபடியும், சிலர், அலறி அடித்து தப்பித்தால் போதும் என ஓட்டமும் பிடித்தனர். சிறிது நேரம் சாலையில் சுற்றிதிரிந்த காட்டெருமை கூட்டம் பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.
இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே ஊட்டி நகரில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் நகருக்குள் சாவகாசமாக உலா வருகின்றன. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. நகரில் சுற்றி திரியும் காட்டெருமைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளோம். எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் நகருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.