தமிழ்நாடு

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

Published On 2023-08-26 06:37 GMT   |   Update On 2023-08-26 06:37 GMT
  • கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
  • திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது‌

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது . இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறி விடுகிறது.

திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீரை விட்டு செல்வதாகவும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனங்கள் கூவத்தில் கலப்பதும் இது போன்று மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம் எனவும், ஆற்றில் நச்சு கலந்த நீர் கலந்து மீன்கள் இறந்ததா என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் கொட்டப்படுகிறது. மேலும் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை ஆற்றில் கலந்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை, கண்காணிப்பதும் இல்லை. ஏற்கனவே மழைக்காலத்திற்கு முன்பாகவே மழை நீர் செல்லும் ஆற்றுப்பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகள் நிரம்பி தண்ணீர் செல்ல வழி இன்றி அடைத்து கிடைக்கிறது. தற்போது திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இறந்த மீன்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News