கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் 1302 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவோ, குளிக்கவோ பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பொதுபணித்துறை சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.