புதிய பாராளுமன்றம் திறக்கும் தினத்தை துக்க தினமாக கடைபிடிப்போம்- திருமாவளவன்
- டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.