செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- நாட்டுக்கு தியாகம் செய்ததைபோல் சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின்: தமிழிசை
- செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான்.
- ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே.
சென்னை:
செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகம் பெரிது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-
செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். அவர்கள் போட்ட வழக்கின் நீட்சிதான் அமலாக்கத்துறை கைது செய்தது.
இப்போதும் செந்தில் பாலாஜி விடுதலை ஆகவில்லை. சட்ட விதிகளின்படி ஜாமின் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது. அதன் மீது விசாரணை நடக்கிறது. விசாரணை முடியட்டும்.
அதற்குள் இதை அரசியல் ஆக்கி அவரது தியாகம் பெரிது. உரம் பெரிது என்றால் இந்த மாதிரி புகார்களுக்கு ஆளாகி தனது கட்சியினர் சிறை செல்வதை முதலமைச்சர் தியாகம் என்கிறாரா?
எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் பரவாயில்லை. நெஞ்சுரத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறாரா?
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு தண்டனை அனுபவித்தது இல்லை என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் ஜாமின் வழங்காதது ஐகோர்ட்டு தானே. அப்படியானால் ஐகோர்ட்டு உத்தரவை விமர்சிக்கிறாரா?
தவறு செய்பவர்கள் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்பதுதான் இந்த மாதிரி கைது நடவடிக்கை. இது பா.ஜனதா ஆட்சியில் மட்டுமல்ல. காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்திருக்கிறது.
ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே. அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது செய்த தவறுகள், தி.மு.க. பக்கம் வந்ததும் தியாகமாக மாறிவிட்டதா?
சுதந்திர போராட்ட வீரரைப் போல சித்தரிக்க முயல்வது அபத்தமானது. இளைஞர்களை தவறாக வழி நடத்துவது. வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
அமைச்சராகி கோட்டையில் கையெழுத்து போடப் போகிறாரா? அமலாக்கத்துறையில் கையெழுத்து போட்டு புதிய முன்னுதாரணத்தை சொல்லப் போகிறாரா? என்பதையும் தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.