கம்பத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டிய அரிசிக்கொம்பன் யானை
- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது.
- இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கம்பம்:
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக்கொம்பன் மாவடி, வட்டதொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.
இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் நடமாடி ஆக்ரோசத்துடன் சென்றது. அப்போது யானையை படம்பிடிக்க முயன்ற ஒருவரை தூக்கிவீசியது. உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.