பெண் கொடுத்த ஆபாச பட புகார்- நாகர். கோர்ட்டில் காசி ஆஜர்
- காசி மற்றும் அவரது தந்தை பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
- இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவரது மகன் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜீனியர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயது இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள் உள்பட பலரை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு காசி மிரட்டியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காசி மீது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் குமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் காசியின் நண்பர்களான 2 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் காசி மற்றும் அவரது தந்தை தங்க பாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த 2 வழக்குகளுக்கு சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது.
விசாரணையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர். தொடர்ந்து 4-வது நாளாக இன்று காசி மற்றும் தங்கபாண்டியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் முக்கிய சாட்சியான இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார். கடந்த 4 நாட்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்க பாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.