பறக்கும் ரெயிலில் செல்போன் பறித்தபோது தவறி விழுந்து இளம்பெண் பலி- 2 வாலிபர்கள் கைது
- ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
- ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.
அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.
ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.