சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
- தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேரை கைது செய்தனர்.
- அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் மையமாக திகழ்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்களை சுங்கத்துறையினர் பிடித்து பறிமுதல் செய்தாலும் அதனை விட பலமடங்கு கடத்தல் தங்கம் வெளியில் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஒரே நாளில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படையினர் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில் சந்தேகப்படும்படியாக வந்த அனைவரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.
இதேபோல் நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடமும் அதிரடி சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 3 விமானங்களில் வந்த 25 பயணிகளின் உடைமை களில் தங்கக் கட்டிகள், தங்க பசைகள், மற்றும் தங்க செயின்கள் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ. 15 கோடி மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குருவிகளாக சிங்கப்பூர் சென்று சென்னைக்கு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் உள்ள முக்கிய தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை சிங்கப்பூருக்கு குருவிகளாக அனுப்பி வைத்திருந்தது தெரிந்தது. ஒரே விமானத்தில் வந்தால் சுங்கச் சோதனையில் மொத்தமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு 3 விமானங்களில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
இவர்களில் ஒரு பெண் உட்பட 2 பயணிகளிடம் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கம் இருந்தது. மற்ற 23 பயணிகளிடமும் ஒரு கிலோவுக்கு குறைவாகவே தங்கம் இருந்தன. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் போன்று ஒட்டுமொத்தமாக தங்கம் கடத்தி வரும் சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையினர் உள்பட ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கம் கடத்தலில் குருவிகளாக சென்று பிடிபட்டு உள்ள 25 பேரிடமும் தங்கத்துடன் வெளியே சென்றால் யாரை சந்திப்பார்கள்? எங்கு செல்வார்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர். எனவே சென்னையில் தங்கம் கடத்தலில் மூளையாக செயல்படும் கும்பல் விரைவில் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தடப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்த பிரபல யூடியூபர் மற்றும் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.