3½ ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தல்
- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் திடீரென மரணம் அடைந்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் மகன் திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் திடீரென மரணம் அடைந்தார். இதன் மூலம் 20 மாதங்கள் எம்.எல்.ஏ. வாக இருந்த திருமகன் மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இவரும் சுமார் 20 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ. பதவியில் இருந்து மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் 3½ ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருக்கும் நிலையில் இடைத்தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. குறுகிய காலமே எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அடுத்த 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.