தமிழ்நாடு

லாரியில் மணல் கடத்திய 3 பேர் கைது- முன்னாள் டி.எஸ்.பி. உள்பட 7 பேர் மீது வழக்கு

Published On 2024-12-01 04:56 GMT   |   Update On 2024-12-01 04:56 GMT
  • போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
  • தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிடுவதற்காக தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. சற்று தூரம் தள்ளி லாரி நின்றதும் அதிலிருந்த 3 பேரும் கீழே குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான முதலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), லோகநாதன் என்ற கபில் (27), மதுரசேகர் (31) ஆகிய 3 பேரும் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த மணல் கடத்தலுடன் தொடர்புடைய முதலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, அவரது மகன் மனோஜ், கார்த்திக், கந்தபாண்டி, விக்னேஷ், கபில், ராமர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

Similar News