தமிழ்நாடு

நடிகை விஜயலட்சுமி விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு

Published On 2025-02-27 19:07 IST   |   Update On 2025-02-27 19:07:00 IST
  • நடிகை விஜயலட்சுமி வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
  • வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார்.

சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார்.

இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது.

விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்துள்ளார்.

Tags:    

Similar News