சிறு மளிகை கடைகளுக்கு ரூ.1200 தொழில் உரிமத்தொகை- மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு
- 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
- புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேள்வி நேரத்தின் போது பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி எவ்வளவு கடன் வாங்கி உள்ளது. அதற்கு எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள். ஒ.எஸ்.ஆர். லேண்ட் முறைகேடாக பயன்படுத்துவதாக தகவல் வருகின்றன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மேயர் சென்னை மாநகராட்சி 2024-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 63 கோடி கடன் வாங்கியது. இதில் ரூ.1,573 கோடி திருப்பி கட்டப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.1,488 கோடி நிலுவையில் உள்ளது.
இதற்காக ரூ.8.5 கோடி வட்டி கட்டுகிறோம் காலாண்டுக்கு ஒரு முறை வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ கணேசன் பேசும்போது, சென்னை மாநகராட்சியில் மேயர் துணை மேயரை ஆணையாளரை சந்திக்க முடிகிறது.
ஆனால் குறிப்பிட்ட ஒரு அதிகாரி அறையில் இருந்து கொண்டே மாமன்ற உறுப்பினரை சந்திக்க முடியாது என பணியாளரிடம் சொல்லி அனுப்புகிறார் சந்திக்க மாட்டேன் என போர்டு வைத்து விட்டால் நாங்கள் சந்திக்க செல்ல மாட்டோம்.
சில பணிகளை செய்யலாம் என நாங்கள் அவரை சந்திக்க நினைக்கிறோம். ஆனால் அவர் அனுமதி மறுக்கிறார். இதனால் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார்.
மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பேசுகையில் மாநகராட்சி மண்டலக் குழு கூட்டங்களில் வருவாய் துறை சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கு பெறுவதில்லை என்று புகார் கூறினார்.
மேலும் தனது மண்டலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளன மூன்று வார்டுகளில் உதவி பொறியாளர்கள் இல்லை அதை சரி செய்து தாருங்கள். மணலி பகுதியில் மாலை 4 மணிக்கு அம்மோனியா வாயு திறந்து விடப்படுகிறது. 6 மணி வரை இது வருகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் இதை கண்காணிக்க வேண்டும். எனது பகுதியில் 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
10 சதவீத பணிகள் தான் இன்னும் பாக்கியுள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மணலி பகுதியில் ஆட்டு இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்றார்.
ஆணையாளர் குமரகுருபரன் இதற்கு பதில் அளித்து பேசுகையில், நான் தலைமைச் செயலாளருடன் பேசி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்காணிக்க கூறுகிறேன். உயர் அதிகாரிகளிடம் கூறி மண்டல கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகள் வருவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.
சென்னையில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகளுக்கு ஆயிரம் சதுரடி வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 500 தொழில் உரிமைத் தொகையாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் 500 சதுர அடிக்குள் செயல்பட்டு வரும் சிறு மளிகைகாரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
அவர்களின் சுமையை குறைக்க மாநகராட்சி 2 நிலைகளாக வரையறுத்து உள்ளது. அதன்படி, 500 சதுர அடிக்குள் செயல்படும் மளிகைக் கடைகள் தொழில் உரிமக் கட்டணம் ரூ.1,200-ம், 501 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடி வரையிலான மளிகைக் கடைகள் ரூ.3 ஆயிரத்து 500-ம் தொழில் உரிமத் தொகையாக செலுத்த வேண்டும்.
இதன் மூலம் 500 சதுர அடிக்குள் இருக்கும் சிறு மளிகைக் கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மிச்சப்படும். இந்த புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்கவும் மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரை மற்றும் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், புது கடற்கரை பகுதிகளை ஒரு வருடம் தூய்மையாக பராமரிக்க ரூ.4 கோடியே 54 லட்சம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.