தமிழ்நாடு

சென்னைக்கு விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல்- இளம்பெண் கைது

Published On 2024-11-23 10:45 GMT   |   Update On 2024-11-23 10:45 GMT
  • பெண் போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது.
  • பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் சுமார் 30 வயதுடைய பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, மறுநாளே இந்த விமானத்தில், சென்னைக்கு திரும்பி வந்துள்ளதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அந்த பெண் பயணியின் பையில் பார்சல் ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த பார்சலில், உயர் ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்தது. இந்த கஞ்சா போதை பொருளை பணக்காரர்கள், வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.

அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 3 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடைய சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து இந்த கஞ்சா போதை பொருளை வேறு யாரோ ஒருவர் கடத்திக் கொண்டு வந்து, தாய்லாந்து நாட்டில் இந்த பெண் பயணியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த பெண் போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சமீபத்தில் சென்னையில் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திரைப்பட துணை நடிகைக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது பிரபலமானவர்கள் யாருக்காவது இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சுங்கத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News