தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு- 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-12-13 02:55 GMT   |   Update On 2024-12-13 02:55 GMT
  • நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது.
  • ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.29 அடிக்கு நீர் நிரம்பியதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மெல்ல அதிகரித்தது. நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து 713 கன அடியாக இருந்த நிலையில், கனமழை காரணமாக படிப்படியாக நீர்வரத்து மளமளவென்று அதிகரித்தது.

நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தும் 6,622 கன அடியாக அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.43 அடியை தொட்டதால், ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.29 அடியை எட்டியதையடுத்து காலை 8 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.29 அடிக்கு நீர் நிரம்பியதையடுத்து 1,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,456 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு 6,500 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுவதால் 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியப்பேடு, திருநீர்மலை, அடையாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News