ஃபெஞ்சல் புயல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய துணை முதலமைச்சர்
- புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
- உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
புயல் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
புயலால், புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதன்படி, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 120 பேர் கொண்ட, 65 இருளர் குடும்பங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு, உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்ற அவர், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்றார். அங்கு புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
அப்போது குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், இதயவர்மன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.