தமிழ்நாடு

அ.தி.மு.க.வினர் கைது கோழைத்தனத்தின் உச்சம்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Published On 2025-02-27 12:48 IST   |   Update On 2025-02-27 12:48:00 IST
  • ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
  • அதிமுக-வைக் கண்டாலே ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை

சென்னை :

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கவிருந்த கழக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆறுமுகம், கழக மகளிர் அணி இணைச் செயலாளர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மரகதம் குமரவேல், பல்வேறு கழக நிர்வாகிகளையும் மற்றும் தொண்டர்களையும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறையால் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.

அஇஅதிமுக-வைக் கண்டாலே இந்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும் , சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம்.

பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், ஆறுமுகம் , மரகதம் குமரவேல், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.



Tags:    

Similar News