தமிழ்நாடு

சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கும்போது பலத்த காற்றால் தடுமாறிய விமானம் - அதிர்ச்சி வீடியோ

Published On 2024-12-01 10:30 GMT   |   Update On 2024-12-01 10:30 GMT
  • நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது.
  • இன்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே நள்ளிரவு 1 மணிக்கு விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இதனிடையே ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தலின்போது நேற்று சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஓடுபாதையில் இறங்க முயன்ற விமானம் தடுமாறியது. உடனே சுதாரித்து கொண்ட விமானி விமானத்தை தரையிறக்கம் மேலே எழுப்பி பறக்க வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News