போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் தீவிரம்- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு.
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 90 கி.மீ- மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ- புதுச்சேரியில் இந்து 80 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மதியம் 3 மணி நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபு,மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
மழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. புயல், மழையால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,700 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஹைட்ராலிக் மரம் அறுக்கும் இயந்திரம், ஹைட்ராலிக் ஏணி என 500 கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.