தமிழ்நாடு

சாலை நடுவே இருக்கும் இரும்பு தடுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

Published On 2024-11-23 11:30 GMT   |   Update On 2024-11-23 11:31 GMT
  • கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
  • கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.

மீனம்பாக்கம் சுரங்கப்பாதையில் இருந்து மூவரசம்பேட்டை வரை செல்ல பி.வி. நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, திரிசூலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகவும், ஒரு மாற்றுப்பாதையாக உள்ளது.

பழவந்தாங்கலில் பி.வி.நகர் காமராஜர் சாலை - என்.ஜி.ஓ காலனி சந்திப்பில் டி.ஜி.கியூ.ஏ. கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இதன் எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி சில வாரங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு அதை குடிநீர் வாரிய ஊழியர்கள் புது மூடி அமைத்து சரி செய்தனர். மேலும் அதில் வாகனங்கள் எதுவும் சென்று விடாமல் இருப்பதற்காக அதன் பக்கவாட்டில் இருபுறமும் இரும்பு பலகை தடுப்பு அமைத்தனர்.

இந்த பணிகள் முடிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் சாலை நடுவே இருந்து இரும்பு தடுப்பு அகற்றப்படாமல் இருப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் மூவரசம்பேட்டை - திரிசூலம் பகுதியில் கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர். ஆனால் இதுவரை யாரும் இதை எடுக்கவில்லை. உடனடியாக கட்டிடக்கழிவுகள், இரும்பு தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News