தஞ்சை மாநகராட்சி பள்ளி இட விவகாரம்: மேயர் மனைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
- மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
- வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த பத்மநாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் நகராட்சி பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சியின் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னுமணி எனும் தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்ட விரோதமாக மாற்றப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக, முறைகேடு செய்து தனி நபரின் பெயரில் அந்த இடத்திற்கு பட்டா வாங்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை நகராட்சி அலுவலர்கள் எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தஞ்சை மாநகராட்சியின் ஆணையர், மேயர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து சுயநல நோக்கில் சட்ட விரோதமாக அந்த இடத்தை விற்பனை செய்து, தற்போது மேயரின் மனைவியின் பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பொன்னுமணி, தஞ்சை மேயரின் மனைவி சங்கீதா, தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் ஆகிய 3 பேரையும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட இடம் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.