தமிழ்நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

Published On 2024-12-14 19:09 GMT   |   Update On 2024-12-14 19:09 GMT
  • பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது.
  • வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர்.

சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:

என் அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது. பெரும் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், என்பவை இருக்க, அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது.

வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர் அன்பு நண்பர் இளங்கோவன் அவர்கள். சட்டமன்ற விவாதங்கள் ஆனாலும் சரி, கட்சி அரசியல் கூட்டங்களானாலும் சரி, களைப்பும் தளர்ச்சியும் இல்லாமல் முழு மூச்சோடு செயல்பட்டவர்.

தகைமையுடைய தலைவரை இழந்து அதிர்ந்து நின்றிருக்கும் காங்கிரஸ் அன்பர்களுக்கும், ஆலமரமாகத் தங்களைக் காத்துவந்த மூத்தவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன்.

'நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்ற வள்ளுவ வாசகமே நெஞ்சில் மோதுகிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News