மாநகர பஸ் குறிப்பேட்டில் ஆங்கிலம்: அன்புமணி கண்டனம்
- தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
- பஸ் குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 1956-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். பஸ்களுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி, ஓட்டுனர்களும், நடத்துனர்களும் 10-ம் வகுப்புக் கல்வித் தகுதியில் பணிக்கு சேர்ந்தவர்கள். அவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எனவே, பஸ் குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.