ஈரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
நாளை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இப்போதிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பெரிய பெரிய ஓட்டல், ரிச்சார்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டின் போது ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புத்தாண்டின்போது ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். சிலர் கேட்கலை வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாகன ஓட்டிகள் மது அருந்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது,
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றார்.