இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: ஆட்டுக்குட்டியை அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டம்
- இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
- தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரெயில்நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் இந்தியை எதிர்த்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தும் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை ஊர்வலமாக அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழம் வழங்கி போராட்டம் நடத்தினர்.
தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்துக்கு தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல்செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.