பரம்பிக்குளம் அணை நிரம்பியது- தண்ணீர் திறப்பு
- அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
- தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது.
இந்த அணையின் முழு கொள்ளளவான 17.82 டி.எம்.சியை எட்டிவிட்டால் ஒரு ஆண்டுக்கு குடிநீருக்கும், பாசனத்துக்கும் போதுமானதாக இருக்கும்.
இந்த பிஏபி திட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பின. இதையடுத்து பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தென்மேற்கு பருவமழை குறைந்த பிறகு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து. நேற்று பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பியது.
அணை நிரம்பியதை அடுத்து, பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.