9 ஆண்டுகளாக பயன்படாமல் மூடி கிடக்கும் ரேசன் கடை
- நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
- புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று பொன்னேரி-தச்சூர் சாலையில் கவுரி தியேட்டர் மற்றும் பழைய டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் வசதிக்காக அருகே கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் கடந்த 2015-16 ம் ஆண்டு ரூ. 7.41 லட்சம் மதிப்பில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ரேசன் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வருவதில் சிரமம் இருப்பதாக கூறி ரேசன் கடை மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் 19-வது வார்டு பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வரும் நிலை நீடித்து வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பயன்படாமல் மூடிகிடக்கும் ரேசன் கடையை திறந்தால் அப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் ரேசன் கடையை திறக்க கோரி துணை வட்டாட்சியர் கனக வள்ளியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். ஆனால் இதுவரை ரேசன் கடையை திறக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.
இதனால் நாங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகிறோம். இதனால் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் ரேசன் பொருட்களை கொண்டு வர அடுத்தவர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த 9 ஆண்டுகளாக மூடி கிடக்கும் ரேசன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.