வேதாரண்யத்தில் 7 நாட்களுக்கு பிறகு உப்பு ஏற்றுமதி பணி தீவிரம்
- 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
- பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக காலமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்பு பெய்த மழையால் நிறுத்தப்பட்ட உப்பு ஏற்றுமதி கடந்த 22-ம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
2 நாள் இடைவெளியில் 23-ம் தேதி மழை துவங்கிய நிலையில் 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தற்போது சேமித்து வைத்துள்ள உப்பை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் வேதாரண்யம் பகுதியில் வெயில் அடித்து வருவதால் சேமித்து வைத்துள்ள உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்தும், பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு ஏற்றுமதி ஒரு வார காலத்திற்குப் பிறகு துவங்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.