தமிழ்நாடு

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது

Published On 2024-11-21 04:23 GMT   |   Update On 2024-11-21 04:23 GMT
  • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது.
  • தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

நெல்லையில் ஒரு வாரத்துக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1,782 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 88 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 2130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் 82.68 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 9 அடி உயர்ந்து 91.38 அடியை எட்டியுள்ளது.

இதனிடையே தாமிரபரணி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு இல்லை என்றாலும் பரவலாக பெய்து வரும் மழையால் சுமார் 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆறு மற்றும் ஏரிகள், குளங்கள், ஓடைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் அதனை கண்டுகொள்ளாமல் நெல்லை மாநகரப் பகுதியில் குறுக்குத்துறை வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறைகளில் பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குளித்து வருகின்றனர்.

மாநகர் பகுதியில் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் டவுன் சந்திப்பு, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், கேடிசி நகர், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் பலதரப்பட்டவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர். அவர்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் இருந்தே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிசான பருவ நெல் சாகுபடி பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அங்கும் தடை நீடிக்கிறது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று விட்டுவிட்டு சில இடங்களில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து பரவலாக சாரல் மழை அடித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அணைப்பகுதிகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 57.50 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருப்பாநதி அணை நீர்மட்டம் 47.57 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 56.25 அடியாகவும் உள்ளது. கடனாநதி அணைப்பகுதியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராம நதிகள் 16 மில்லி மீட்டர், குண்டாறு பகுதியில் 18 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News