தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகத்தில் 26-ந்தேதி முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

Published On 2024-11-23 04:54 GMT   |   Update On 2024-11-23 04:54 GMT
  • தமிழகத்தில் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
  • பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழல் தள்ளிப்போனது.

இன்று காலை 5 மணி நிலவரப்படி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 2 நாட்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது தீவிர தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும். 25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News