தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன்

Published On 2024-10-25 01:56 GMT   |   Update On 2024-10-25 01:56 GMT
  • வழக்குகள் அனைத்தும் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
  • வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

சென்னை:

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

இதுபோன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 வழக்குகளில் ஒரு வழக்கில் 14 பேரும், இன்னொரு வழக்கில் 23 பேரும், மற்றொரு வழக்கில் 2 ஆயிரத்து 202 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி தொடர்புடைய ஒரு வழக்கில் 2,202 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் 100 பேர் வீதம் நேரில் அழைத்து குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவித்த நீதிபதி, முதல்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட 100 பேரில் சிலர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நேரில் ஆஜராகாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இதுதவிர மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News