சீமான் மனைவியிடம் கேட்ட பிறகே சம்மனை கிழித்த தொண்டர்? வைரலாகும் வீடியோ
- 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
- காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.
இதனை தொடர்ந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்ததன்பேரில், சீமான் வீட்டின் காவலாளி அமல்ராஜ் மீது போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் சம்மனை கிழிக்கும் முன்பு சீமானின் மனைவி கயல்விழியிடம் அனுமதி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கறிஞரான கயல்விழி சம்மனை கிழித்தால் என்ன சட்ட விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்தும் சம்மனை கிழிக்க அனுமதித்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில், அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.