திடீரென வந்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்- திருமாவளவன்
- 1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன்.
- நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பூமி சமுத்திரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. இதை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆகுவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்வேன். புதுசு புதுசா வந்தவர்கள், இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள்.
திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கட்சி பணியாற்றினால் கோட்டை சிறுத்தைகள் வசமாகும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்ப உறவினர்களை இங்கு பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் கதறி கண்ணீர் விட்டு என்னிடம் அழுதார்கள்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் ஆறுதல் கூறுவதற்கு வெறுங்கையோடு வரவில்லை. நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த துயரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கெடுத்து ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.