திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்- சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது
- மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
- இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.
2,688 அடி உயரமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தீப தரிசனம் செய்தனர்.
தலைக்கு மேல் கைகளை தூக்கி மலையை பார்த்து வணங்கினர். வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பலர் அகல் விளக்குகளை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகரமே ஜொலித்தது.
மேலும் தீபத் தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குறிப்பாக சின்ன கடைவீதி, தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மிகுந்த நெரிசலுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை தொடங்கி நாளை மாலை நிறைவடைகிறது.
எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர்.
பகலில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் தொடர்ச்சியாக இன்று இரவு அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.