புத்தாண்டு கொண்டாட ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காடு களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகளில் இன்று இரவு சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு, கும்மாளம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் தயாராக உள்ளன. இந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காட்டில் தற்போது மூடு பனியுடன், கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.