டங்ஸ்டன் விவகாரம்: அனுமதி கேட்டுட்டு ரத்து செய்யவும் கடிதம் எழுதும் பேனா வீரர் மு.க. ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி
- 'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
- டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.
'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி," கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் விடியா திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன.
அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்"
மு.க. ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்?
நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது.
திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து, மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு,
தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு,
மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.