தமிழ்நாடு

திருச்செந்தூரில் கோவில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு - ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்

Published On 2024-11-23 13:40 GMT   |   Update On 2024-11-23 13:40 GMT
  • யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
  • இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரது குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் திரு. உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் திரு.சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது. இதில், திரு.சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும். பாகன் திரு.உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News