தமிழ்நாடு

வானிலை தொடர்பான தகவல்களை சரியாக கணிக்க முடியாதது ஏன்?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Published On 2024-12-13 01:59 GMT   |   Update On 2024-12-13 01:59 GMT
  • அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.
  • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது.

சென்னை:

சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் கணிப்பில் வானிலை ஆய்வு மையம் சற்று தடுமாறியது. இதுபோன்று வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியாமல் போவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வானிலையியலை முழுமையாக அறிந்து கொள்ள அறிவியல் கிடையாது. 100 சதவீதம் முழுமையாக கணிக்க முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழக்கூடியது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைதான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அறிவியல் வளரும் போது தொழில்நுட்பமும் வளரவேண்டியது அவசியம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.

புயலை பொறுத்தவரையில், கடல் உள்ளடக்க வெப்பம், கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிதல், காற்றுக்கும், வளிமண்டலத்துக்கும் உள்ள தொடர்பு, மேகக்கூட்டங்கள் எப்படி உருவாகிறது?, அதனால் என்ன வெப்பம் வெளியாகிறது?, புயலின் நகர்வு வேகம் போன்ற பல காரணிகளால் அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.

புயல் உருவாகாதபோது காற்று நேர் திசையில் செல்லும். புயலாக மாறும் போது சுழல் காற்றாக மாறும். அப்போது திசை மாறும். ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது அதற்கு பின்னால் சக்தி பரிமாற்றம் இருக்கிறது. இதையெல்லாம் முழுமையாக அறியப்பட வேண்டும். இன்றைய காலகட்டங்களில் அவை முழுமையாக அறியப்படவில்லை.

ஃபெஞ்சல் புயல் நேரத்தின்போது கூட அது செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை பார்க்கும்போது, புயலாக மாற சாத்தியம் இல்லை என்று சொன்னோம். பின்னர் இரவில் அது வளர்ச்சி பெற்றதால் புயலாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ''ஓடீஸ்'' புயலுக்கு 112 கி.மீ. வரைக்கும்தான் காற்று இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 260 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டது. புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தியும் விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் அப்படி பெறப்பட்ட விவரங்களின் கணிப்புகளும் தவறுகிறது. அறிவியலின் வித்தியாசம் அதில் தெரிகிறது.

எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது. முழுமையாக அறிவியல் அறியப்படவேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பம் இப்போது வந்து இருக்கிறது. தொடர்ந்து முயற்சிகளும் நடக்கிறது.

காலநிலை மாற்றத்தினால் புயல் வலிமையாக உருவாகிறது. திசை மாற்றத்திலும் வேறுபாடு ஏற்படுகிறது. நகர்வு பாதையில் வேறுபாடு ஏற்படுகிறது. புயலை சுற்றியுள்ள மேகக்கூட்டங்கள் சமச்சீராக உருவாகாது. வானிலை கணிப்புகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். தொடர் முயற்சிகளும் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News