உலகம்

காசாவில் ஐ.நா. பணியாளர்கள் பலி: தவறுதலாக தாக்குதல் என இஸ்ரேல் ஒப்புதல்- அமெரிக்கா கண்டனம்

Published On 2024-04-03 05:33 GMT   |   Update On 2024-04-03 05:33 GMT
  • இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது- நேதன்யாகு
  • பொதுமக்களைப் பாதுகாப்பதில் ‘போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை- ஜோ பைடன்

இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள்.

கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும்போது, "உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, "இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்" என்றார்.

உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, பொதுமக்களைப் பாதுகாப்பதில் 'போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News