உலகம்

சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்பையும் தாண்டி 5.3 சதவீதமாக வளர்ச்சி

Published On 2024-04-16 09:47 GMT   |   Update On 2024-04-16 09:47 GMT
  • 2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா.
  • முதல் காலாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

உலகப் பொருளாதாரத்தில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தற்போது மெல்லமெல்ல அதன் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதையும் தாண்டியுள்ளது. கடந்த காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

முந்தைய ஆண்டைவிட மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்த சிறந்த தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு இந்த காலஅளவில் இருந்ததை விட 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சில்லறை விற்பனை 4.7 சதவீதமாக உள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களில் நிலையான முதலீடு, முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா. இத்தகைய வலுவான வளர்ச்சி பொதுவாக பிராந்தியம் முழுவதும் பங்கு விலைகளை உயர்த்தும். ஆனால் செவ்வாயன்று, வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் பின்வாங்கியதை அடுத்து ஆசிய பங்குகள் கடுமையாக சரிந்தன.

Tags:    

Similar News