ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பலி
- சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.
சிரியா:
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தலைவர்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதையடுத்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் உசாமா அல்-முல்காஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இவரை கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அல்-முல்காஜிரை தேடி அமெரிக்காவின் 3 எம்.கியூ.-9 ஆளில்லா விமானம் சிரியா வானில் வட்டமிட்டது. அப்போது வடமேற்கு சிரியாவில் உள்ள அலெப்பா பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.