null
குழந்தையில்லையா? எதற்கு ஓட்டுரிமை?: எலான் மஸ்க் பரபரப்பு கருத்து
- நாம் மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்.
- பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், ஜப்பான் எனும் நாடு இல்லாமல் போகலாம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.
இந்நிலையில், குழந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஒரு டுவிட்டர் பயனர், "குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்தாமல் ஜனநாயகம் நீண்டகாலம் செயல்பட முடியாது" என்று கூறியிருந்தார். அதனை ஆமோதிக்கும் விதமாக, ஆம் என மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பே ஒரு முறை எலான் மஸ்க், "குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சிறிய பங்கே உள்ளது. மனித நாகரிகம் எதிர்கொள்ளும் அபாயங்களிலேயே மிகப்பெரிய அபாயம் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது" என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பிரச்சனை குறித்து 2022ம் ஆண்டு வீடியோ மூலம் ஆல்-இன் உச்சி மாநாட்டில் (All-In Summit) பேசிய அவர் கூறியிருந்ததாவது:
சிலர் குறைவான குழந்தைகளைப் பெற்றால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். இது முட்டாள்தனம். நாம் மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் தற்போது இருக்கும் மனித எண்ணிக்கையையாவது நாம் பராமரித்தாக வேண்டும். 'இந்த பயங்கரமான உலகத்திற்கு நான் எப்படி ஒரு குழந்தையை கொண்டு வர முடியும்?' என கூறுவோருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா? அப்போது உலகம் இன்னமும் மோசமாக இருந்தது என உணர்வீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
ஜப்பானை உதாரணமாக சுட்டிக்காட்டிய மஸ்க், "பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், ஜப்பான் எனும் நாடு இல்லாமல் போகலாம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எலான் மஸ்க் 3 முறை திருமணமானவர் என்பதும், 9 குழந்தைகளுக்கு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.