எகிப்து தபா பகுதியில் ஏவுகணை தாக்குதல்: ஐந்து பேர் காயம் எனத் தகவல்
- காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது
- எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவி பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தவும், தங்களை தயார் படுத்தி வருகிறது இஸ்ரேல்.
காசா முனையைத் தவிர மேற்கு கரை, லெபனான் எல்லை ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரித்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து எல்லையில் 200 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி தபா.
இதற்கு முன்னதாக ஒருமுறை இஸ்ரேல் ஏவுகணை எகிப்து பகுதியை தவறுதலாக தாக்கியது. இந்த தாக்குதல் தவறுதலாக நடைபெற்றது என இஸ்ரேல் ராணுவம் உடனடியாக அறிவித்தது.
ஆனால் தபா மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்ற போதிலும், இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது. அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்பும், நடத்தவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.