ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டிய முன்னாள் ஊழியர் 'சடலமாக' மீட்பு.. பகீர் பின்னணி
- 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
- மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
யார் இந்த சுசீர் பாலாஜி?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.
சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர்.