காசா போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்
- காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது
- இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே ‘ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.
டெல் அவிவ்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் காசாவில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காசா மீதான போரில் இஸ்ரேல் ராணுவம் 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த 2 செய்தி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட செய்தி விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 6 பேரிடம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி நிறுவனங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காசா போரில் இஸ்ரேல் ராணுவம் 'லேவண்டர்' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இது காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது. இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்தால் இலக்கை குறிவைத்து துல்லியமாக வான்தாக்குதலை நடத்த முடிகிறது.
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பயங்கரவாதிகளாக இருப்பதற்கு சாத்தியமுள்ள 37 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களை இலக்குகளாக 'லேவண்டர்' கண்டறிந்துள்ளது.
பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள், அடிக்கடி அலைபேசி மாற்றுபவர்கள் இப்படியான பல்வேறு அளவீடுகள் வழியாக லேவண்டர் இதனை செய்கிறது.
இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே 'ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 'ஹப்சோரா' பயங்கரவாதிகள் புழங்க சாத்தியமுள்ள இடங்களை, கட்டடங்களை கண்டறியும். 'லேவண்டர்' மனிதர்களை கண்டறியும்.
இது தவிர 3-வதாக 'வேர்இஸ் டாடி' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளது. இது லேவண்டரால் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை (பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் நபர்கள்) கண்காணித்து அவர்கள் வீடு திரும்பும்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கும்.
அதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் அந்த வீட்டின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும். இப்படி பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் தாக்கப்படும்போது உடனிருப்பவர்கள் சேர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாதிகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு அமைப்பைப் பயன்படுத்தவில்லை. லேவண்டர் செயற்கை நுண்ணறிவு அமைப்பு அல்ல. அது வெறும் ஒரு தரவுத்தளம் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.