பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற இரண்டு அமெரிக்கர்களை விடுவித்தது ஹமாஸ்
- 7-ந்தேதி தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது ஹமாஸ்
- அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதோடு பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
மற்றவர்கள் நிலைமை என்ன? எனத் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது பெண் எனத் தெரியவந்துள்ளது. இருவரிடமும் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ரிலீஸ் செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை ரிலீஸ் செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.